நாம் வேண்டும் வரங்களையெல்லாம் விரைந்து தரும் சித்தி விநாயகன் நாம் செய்யும் நல்ல செயல்களுக்கு துணை நின்று அனைத்து வெற்றிகளையும் அள்ளித் தருவான். வினை தீர்க்கும் நாயகனான விநாயகப் பெருமானை வணங்கினால், தீவினைகள் யாவும் நீங்கி, நல்லவை அனைத்தும் நம்மைத்தேடி வரும். உங்கள் வாழ்க்கையில் என்றும் மங்களமான சுப நிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடைபெற அருள் புரிவான் திருவெண்காடுறை சித்தி விநாயகன்.
கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை திருமே.
ஸ்ரீ "துர்முகி" சித்திரை தமிழ் வருஷப் பிறப்பு வாழ்த்து
உலகிற்கு ஒளி கொடுக்கும் கண்கண்ட தெய்வமான சூரிய பகவான், மேஷம் தொடங்கி மீனம் வரையிலான பன்னிரெண்டு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் உச்சம் பெற்று மிக பலமாக சஞ்சரிக்கும் காலம்தான் சித்திரை மாத பிறப்பாகவும், தமிழ் புத்தாண்டாகவும் அமைகிறது. சுப நிகழ்ச்சிகளை வழங்க வருகை தரும் “துர்முகி வருடம்” நமக்கு வெற்றியையும் மங்களங்களையும் தருகிற வருடமாக அமையட்டும்.
நாம் வேண்டும் வரங்களையெல்லாம் விரைந்து தரும் சித்தி விநாயகன் நாம் செய்யும் நல்ல செயல்களுக்கு துணை நின்று அனைத்து வெற்றிகளையும் அள்ளித் தருவான். வினை தீர்க்கும் நாயகனான விநாயகப் பெருமானை வணங்கினால், தீவினைகள் யாவும் நீங்கி, நல்லவை அனைத்தும் நம்மைத்தேடி வரும். உங்கள் வாழ்க்கையில் என்றும் மங்களமான சுப நிகழ்ச்சிகள் தடை இல்லாமல் நடைபெற அருள் புரிவான் சித்தி விநாயகன்.
இந்த துர்முகி வருடமானது இலங்கை நேரப்படி 13.04.2016 புதன்கிழமை முன்னிரவு 6 மணி 36 நிமிடத்தில் பிறக்கிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லக்கூடிய பொன்னான தினமான புதன்கிழமையில் பிறப்பது விசேஷம். அதனால் அனைவருக்கும் பொன்னான வாழ்க்கை அமைய சித்தி விநாயகரின் பாதங்களை பணிந்து எனது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்கின்றன்.
சித்திரை துர்முகி வருடப்பிறப்பன்று, அதிகாலையில் கண் விழிக்கும்போது, வினை தீர்க்கும் நாயகனான விநாயகப் பெருமானை பார்த்து வணங்கினால், தீவினைகள் நீங்கி, நல்லவை அனைத்தும் தேடி வரும்.
துர்முகி வருடத்தில் சகல இன, மத, மொழி கலாச்சாரங்களைப் பேணும் மக்கள் யாவரும் அன்பினால் இணைந்திடவும், உலகில் நட்புணர்வு பெருகவும், பொறுமை அதிகரிக்கவும், செழுமை அதிகரிக்கவும், ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதரங்கள், உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் அன்புகாட்டி சந்தோசமாக சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திடவும், மாணவர்கள் கல்வி கலைகளில் மேன்மையுற்று நற்பண்புள்ளவர்களாகவும், நல்ல சமுதாயத்தை வழிநடத்துபவர்களாகவும், தொழில்அதிபர்கள், வர்த்தகர்கள், உத்தியோகம் வேண்டியுள்ளவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திடவும், உத்தியோகத்திலிருப்பவர்கள் உயர்வு பெற்றிடவும், நோய் துன்பங்களினால் அல்லல் படுவோர் குறிப்பாக வயோதிபர் நோயற்ற வாழ்வு பெற்றிடவும், பிள்ளைகள் எமது மொழி, சமய, கலை, கலாச்சார சிறப்புகளுக்கு அமைவாக நல்ல பண்பாடு மிக்க சமுதாயமாக எமது இன அடையாளத்தைக் காப்பாற்றுபவர்களாக வளர்ந்திடவும் இவை எல்லாவற்றுக்கும் மேலாக நாடுகளுக்கிடையேயான யுத்த அபாயங்கள் நீங்கிடவும் பஞ்சபூதங்களால் (நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம்) ஏற்படும் இயற்கை அழிவுகள் நீங்கிடவும், உலகத்தில் அமைதி, சமாதானம் கிடைத்து “துர்முகி” வருடம் எல்லோருக்கும் நல்வாழ்வைத்தரும் வருடமாக அமைய மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமானின் திருவருளோடு புதுவருட நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
சுபம்.
சீரார் திருவெண்காடு போற்றி ! போற்றி ! !