Saturday, April 30, 2016

‪திருவெண்காடு ‎பொற்சபையில்‬ ஆடல் அரசனுக்கு சித்திரை திருவோணம்‬ திருநீராட்டல் (30.04.2016)


தேவர்கள் தினமும் ஆறு முறை நடராஜருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதாக ஐதீகம். அவர்களுக்கு ஒரு நாள் என்பது, பூலோகத்தில் ஒரு ஆண்டுக்குச் சமமானது. இதன் அடிப்படையில், சிவன் கோயில்களில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜர் அபிஷேகம் நடக்கிறது.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)


குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், 
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் 
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

திருவெண்காடு சுவேதாரணியம்பதி ஆதி சிதம்பரம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.

‪ஆண்டுக்கு ஆறு அபிஷேகம்‬: ஆடல் வல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகம விதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது ‪ மார்கழி திருவாதிரை‬, சித்திரை திருவோணம் மற்றும் ‪ ஆனி_உத்திர‬ நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி, மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.



சித்திரை ஓணமும் சீரானியுத்திரமாம்
சத்ததனு ஆதிரையும் சார் வாளும் - பத்திமிகு
மாசியரி கன்னி மருது சதுர்த்தசி மன்
றீசர பிடேக தினமாம்."

01. ‪‎மார்கழி‬ மாதம் : ‪‎திருவாதிரை‬ நட்சத்திரம் - தேவர்களின் அதிகாலை பூஜை (தனுர் மாத பூஜை) - சிறப்பு அபிஷேகம், நடராஜர் உற்சவம்

02. ‪மாசி‬ மாதம் : வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் காலை சந்தி பூஜை - அபிஷேகம் மட்டும்.

03. ‪சித்திரை‬ மாதம் :‪ திருவோண‬ நட்சத்திரம் - தேவர்களின் உச்சிக்கால பூஜை - அபிஷேகம் மட்டும்.

04. ‪‎ஆனி‬ மாதம் : ‪‎உத்திர‬ நட்சத்திரம் - தேவர்களின் சாயங்கால பூஜை - சிறப்பு அபிஷேகம், நடராஜர் உற்சவம்.

05. ‪‎ஆவணி‬ மாதம் : வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் இரண்டாம் கால பூஜை - அபிஷேகம் மட்டும்.

06. ‪புரட்டாசி‬ மாதம் : வளர்பிறை சதுர்த்தசி திதி - தேவர்களின் அர்த்தஜாம பூஜை - அபிஷேகம் மட்டும்.

ஆகிய ஆறு தினங்களே பொற்சபையில் ஆடும் மன்னனுக்கு உரிய அபிஷேக தினங்கள்.


அந்த வகையில் இன்று அனைத்து சிவாயலங்களிலும் எழுந்தருளியுள்ள ஆனந்த மூர்த்திக்கு சித்திரை திருவோணம் திருநீராட்டல் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துக் கொண்டு அம்பலக் கூத்தனின் அருளினை பெறுவோம். சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் ஆனந்த கூத்தனின் அருள் அபிஷேகம் கண்டு நன்மையடைவோமாக....


"ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான் நிலாவி இருப்பன் என் நாதனைத்
தேன் நிலாவிய சிற்றம்பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே."

‪பொருள்‬: எனது உடலில் உயிர் இருக்கும் வரையிலும் நான் எனது உள்ளத்தில் தில்லைச் சிற்றம்பலவனாரின் நினைவுகள் நிலை பெற்றிருக்குமாறுச் செய்வேன்; எனக்குத் தேனாக இனிக்கும் சிவபெருமான், எனக்கு வீடுபேறு அளித்து, என்றும் பேரின்பத்தில் திளைக்க வைப்பார்.


"திருவெண்காடு பொற்சபையில் ஆனந்த நடனம் புரியும் ஆனந்த நடராஐமூர்த்தி சமேத சிகாமிஅம்பாளின் திருவருளைப் பெற அடியார்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்!"

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!





தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


ௐ||ௐ||ௐ --------- திருச்சிற்றம்பலம் --------- ௐ||ௐ||ௐ