Friday, July 8, 2016

‪திருவெண்காட்டில் ஆனந்த ‪தாண்டவ தெய்வத்திற்கு ‪ ஆனித்திருமஞ்சன பெருவிழா‬ ! ! ! 10.07.2016


ருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மட்டும் காணும் ஆடலரசனான ஸ்ரீ நடராஜப் பெருமான் ஆடிய அற்புதத் தாண்டவங்களில் 108 தாண்ட வங்கள் மிகவும் போற்றப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவத்திற்கும் புராண வரலாறு உண்டு. அந்த வகையில் சில திருத்தலங்களில் ஆடிய தாண்டவங்கள் மிகவும் சிறப்பிக்கப்படுகின்றன.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


"திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, ஆதி சிதம்பரம், பொன்னம்பலம், பூலோககைலாய, புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்."

"அன்பினுக்கு இரங்கும் அருட்கடல்!.. 
திருவெண்காடுறை சித்திவிநாயகனை சிந்தை செய்வோம்!."

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை
பொற்சபை (பொன்னம்பலம்)


திருவெண்காடு சுவேதாரணியம்பதி ஆதி சிதம்பரம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், 
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் 
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

திருநெல்வேலியில் தாமிர சபையில் இறைவன் ஆடும் தாண்டவம் படைத்தல் தொழிலைக் காட்டக்கூடியது. இதனை ‪‎காளிகா‬ தாண்டவம் என்பர்; முனி தாண்டவம் என்றும் சொல்வர். மதுரை மற்றும் திருப்பத்தூரில் ஆடும் தாண்டவம் ‪‎கவுரி‬ தாண்டவம் மற்றும் ‪‎சந்தியா‬ தாண்டவமாகும். இது காத்தல் தொழிலைக் காட்டக்கூடியது. இருண்ட நள்ளிரவில் சிவபெருமான் ஆடும் ‪‎சங்கார‬ தாண்டவம் அழித்தல் தொழிலைக் காட்டக்கூடியது. மறைத்தல் தொழிலை திருக்குற்றாலத்தில் சித்திரசபையில் ஆடினார். இதை ‪‎திரிபுர‬ தாண்டவம் என்பர். சிதம்பரத்தில் இறைவன் ஆடும் தாண்டவம் ‪‎ஆனந்த‬ தாண்டவம். இவை ஐந்து தொழில்களைக் காட்டக் கூடியவை என்று புராணங்கள் கூறுகின்றன.


சிவபெருமான் தாண்டவமாடும் முதன்மைச் சபைகள் ஐந்து. பதஞ்சலி, வியாக்ரபாதருக்காக ஆனந்த தாண்டவம் ஆடினார். இது சிதம்பரம் திருத்தலத்தில் நடந்தது இது பொன்னம்பலம் ஆகும்.

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வந்த பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் வேண்டிக் கொண்டதால், சிவபெருமான் திருமண விருந்திற்கு முன் ஆடிக்காட்டிய நடனம் மதுரை வெள்ளியம் பலத்தில் நடைபெற்றது. இங்கு ராஜசேகரபாண்டியன் என்னும் மன்னனின் வேண்டுதலுக்கிணங்க சிவபெருமான் கால் மாறி - வலது காலைத் தூக்கி ஆடினார். 


இதேபோல்- திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ள கீழ்வேளுர் திருத்தலத்தில் அகத்திய மாமுனிவருக்கு இறைவன் திருமணக் காட்சியைக் கொடுத்தபோது, அகத்தியரின் வேண்டுதலுக்கு இணங்கி இறைவன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினார். இறைவனின் வலது பாத தரிசனத்தை அகத்தியர் கண்டார்.

சிவபெருமான் வலக்காலை உடலோடு ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி ஆடிய தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம். இந்த நிகழ்ச்சி திருவாலங்காட்டில் நடந்தது. இத்தலத்தில் ரத்தின சபை அமைந்துள்ளது. 


வேணுவனமாகிய நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இறைவன் தாமிரசபையில் நடனமாடுகிறார். திரிகூடமலைக்கு வந்து திருமாலும், பிரம்மாவும், தேவர்களும் தவம் செய்ய, அவர்களுக்காக இறைவன் திருக்கூத்து தரிசனம் தந்தார். திரிகூடமலையான திருக்குற்றாலத்தில் உள்ளது சித்திரசபை. இங்கு இறைவன் ஆனந்த நடனம் புரியும் ஓவியம் உள்ளது.

திருவெண்காடு சுவேதாரண்யர் திருக்கோவிலில் உள்ள நடன சபையை ஆதிசபை என்று போற்றுவர். இங்கு சுவேதகேது என்ற மன்னன் இறைவனை வேண்டியதால் நவதாண்டவங்களை ஆடி மகிழ்வித்தார். இதற்குப் பிறகு தான் இறைவன் சிதம்பரத்தில் ஆடினார் என்று புராணம் கூறுகிறது.


திருவாரூரில் திருமாலின் மார்பிலே இருந்த ஈசன் அவர் மூச்சுக்காற்றுக்கு ஏற்ப ஆடிய நடனம் அஜபா நடனம் எனப்படுகிறது. திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்காறாயிலில், நடராஜரின் அம்சமாகிய ஆதி விடங்கர் குக்குட நடனம் ஆடுகிறார். சண்டைக்குச் செல்லும் கோழியைப் போன்று இடமும் வலமும் சாய்த்துப் பார்த்து முன்னேறி, நிதானித்து, சுழன்று ஆடினார்.


தேனடையில் வண்டு ஒலித்துக் கொண்டே முன்னும் பின்னும் மேலும் கீழுமாக ஆடுவதைப் போன்று ஆடும் இறைவனின் பிரமர தாண்டவத்தை திருக்குவளையில் தரிசிக்கலாம்.

திருநள்ளாற்றுத் தலத்தில் பித்தேறியவனைப்போல் - மனம் போனபடியெல்லாம் இறைவன் ஆடிய நடனத்தை உன்மத்த நடனம் என்பர். நாகை வேதாரண்யத்தில் புவனிவிடங்கர் ஆடும் நடனம், அம்சபாத நடனம் எனப்படுகிறது. அன்னப்பறவை அடிமேல் அடியெடுத்து வைத்து அழகாக நடப்பது போன்ற தோற்றமாகும்.


திருவாரூர், திருக்குவளைக்கு வடக்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருவாய்மூரில் நீலவிடங்கர் ஆடும் நடனம் கமல நடனமாகும். இறைவன் காலனை அழித்த பின் ஆடிய காலசம்ஹார தாண்டவத்தை மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் தலத்தில் தரிசிக்கலாம்.


ஈரோடு அருகிலுள்ள கொடுமுடியில், சித்ரா பௌர்ணமியன்று பரத்வாஜ முனிவருக்காக இறைவன் ஆடிய நடனத்தை சித்திர நடனம் என்று போற்றுவர். ஆடலரசனான நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகின்றது. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் உச்சிக் காலத்திலும், ஆனித் திருமஞ்சனம் உத்திர நட்சத்திரத்தில் பிரதோஷ காலத்திலும், ஆவணி மாதம் சதுர்த்தசி திதியன்று சாயரட்சை காலத்திலும், புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் அர்த்த ஜாமத்திலும், மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்தன்று நள்ளிரவிலும், மாசி மாதம் சதுர்த்தசி திதியில் கால சந்தியிலும் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும்.


இதில் ஆனி மாதம் நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை "ஆனித் திருமஞ்சனம்" என்று போற்றுவர். தாண்டவங்கள் பல ஆடிய இறைவனான ஸ்ரீ நடராஜப் பெருமான் சில திருத்தலங்களில் வித்தியாசமான திருக்கோலத்திலும் அருள்புரிகிறார்.

திருச்சியை அடுத்துள்ள திருவாச்சி என்னும் திருத்தலத்தில் விரிந்த செஞ்சடையின்றி, முயலகனுமின்றி ஒரு சர்ப்பத்தின் மேல் ஆடும் கோலத்தில் உள்ளார்.


திருச்சிக்கு அருகிலுள்ள வயலூர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நடராஜர் திருமேனி விக்கிரகத்தில் திருவாச்சி இல்லை. திரிசடை ஜடாமுடி இல்லை. கிரீடம் மட்டும் அணிந்துள்ளார். இடது மேல் கையில் அக்னியும், வலது மேல் கையில் உடுக்கையும், வலது கீழ்க்கரம் அபயம் தரும் நிலையிலும், இடது கீழ்க்கரம் வலது பாதத்தைக் காண்பிக்கும் நிலையில் தொங்கவிட்டும் எழுந்தருளியுள்ளார். 

மேலும் இவரது காலடியில் முயலகன் மிதிபட வில்லை. முயலகன் இல்லாத அற்புதத்திருமேனி என்று போற்றுவர். கால் தூக்கி ஆடாமல் நடனக் கோலத்தில் சற்று நளினமாகக் காட்சி தரும் இத்திருமேனியை சுந்தரத் தாண்டவத் திருமேனி என்றும் உமாநடன வடிவம் என்றும் போற்றுவர்.


திருவெண்காடு 
ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர்  பிரம்மவித்தியாம்பிகை
தமிழ்நாடு - இந்தியா


சிவாலயங்களில் பஞ்சலோகத் திருமேனியில் காட்சிதரும் ஸ்ரீ நடராஜப் பெருமான், ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் மரகதக் கல் (பச்சைக் கல்) திருவுருவில் எழுந்தருளியுள்ளார். இத்திருமேனிக்கு சந்தனக்கலவை பூசியிருப்பார்கள்.

ஸ்ரீ நடராஜருக்கு மட்டுமின்றி ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ ரங்கநாதருக்கும் ஆனித்திருமஞ்சன அபிஷேகம் நடைபெறுகிறது. ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தன்று பெரிய பெருமாளான ஸ்ரீ பள்ளிகொண்ட ரங்கநாதருக்குத் திருமஞ்சனம் மிகச்சிறப்பாக நடைபெறும். இதனை ஜேஷ்டாபிஷேகம் என்று போற்றுவர்.


இத்திருமஞ்சனத்தின்போது பெருமாளின் திருக்கவசங்களையெல்லாம் களைந்துவிட்டு ஏகாந்தத் திருமஞ்சனம் நடைபெறும். இதை சேவிப்பது மிகவும் விசேஷம். இதனை பெரிய திருமஞ்சனம் என்பர். ஸ்ரீ ரங்கம் கோவிலின் தென்புறத்தில் ஓடும் காவிரி நதியில் வேத மந்திரங்கள் முழங்க நீர் சேகரிப்பார்கள். தங்கக் குடத்தில் நிறைத்த நீரை யானையின் மீதும்; வெள்ளிக்குடங்களில் நிறைத்த நீரை கோவில் பரிசாரகர்கள் தலையில் சுமந்தும் திருமஞ்சனத்திற்கு எடுத்து வருவார்கள்.

திருவாலங்காடு 
ரத்தினசபை
ஊர்த்தவ தாண்டவம்


திருமஞ்சனம் நடைபெற்றதும் பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு இடுவார்கள். திருமுக மண்டலத்தைத் தவிர மற்ற திருமேனியை இந்த நாளில் தரிசிக்க முடியாமல் திரையிட்டிருப்பார்கள்.


திருமஞ்சனத்திற்கு அடுத்த நாள் கோவிலில் பெருமாளுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்புமிக்க பிரசாதத்தை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்த பின் பக்தர்களுக்கு அளிப்பார்கள். ஆனித் திருமஞ்சன அபிஷேகத்தின்போது நடராஜப் பெருமானையும், ரங்கநாதப் பெருமாளையும் தரிசிப்போர் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதில் ஐயமில்லை!
ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''