Wednesday, July 6, 2016

திருவெண்காட்டில் சிறந்த கல்வி அறிவும் தெளிந்த ஞானமும் பெற சதுர்த்தி விரத வழிபாடு ! ! ! 07.07.2016


விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்
கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்
பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்
பெருகும் திருவெண்காடுறைப் பிள்ளையைப் பேணுவாம்

முதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் தங்கத்தாலோ அல்லது தாமிரத்தாலோ அல்லது படத்திலோ விநாயகர் செய்து பூஜை செய்ய வேண்டும்.


விதிமுறைப்படி நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து கொண்டு விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் தரித்திரம் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.


ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸன்னிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்!

இவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார். விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடை பிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும்.


இடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள். விநாயகர் விரதத்தை ஸ்ரீ சித்திவிநாயகர் வீற்றிருக்கும் திருவெண்காட்டிலும் (மண்டைதீவு - இலங்கை) ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார் பட்டியிலும் மற்றும் திருவலஞ்சுழி (கும்பகோணம்), உப்பூர் (ராமநாதபுரம்), ஈச்சனாரி (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் செய்யலாம்.


சிலர் இந்த இடங்களில் விரதத்தை தொடங்கியும் அதே இடங்களில் நிறைவு செய்வதும் உண்டு. இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களிலும், வீடுகளிலும் விரதத்தை கடைபிடிக்கலாம். எங்கு விரதம் இருந்தாலும் அதற்கேற்ற பலன் உண்டு.





ஓம் கம் கணபதயே நமஹ...!!

தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


ௐ||ௐ||ௐ --------- திருச்சிற்றம்பலம் --------- ௐ||ௐ||ௐ