ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.
இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு.
இது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இதில் மாதா மாதம் அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லசஷ்டி என்று பெயர் பெறும். இதனை பூர்வட்ச சஷ்டி என்றும் கூறுவர்.
பவுர்ணமி கடந்த பின் வரும் சஷ்டி கிருஷ்ண சஷ்டி என்று பெயர் பெறும். இதனை அபரபட்ச சஷ்டி என்றும் கூறுவார்கள்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோயில்.
இங்குதான் முருகப் பெருமான் தங்கி தேவ குருவாகிய வியாழ பகவானால் பூசிக்கப்பட்டு பிறகு சூரபத்மனை அழித்தார். போரிலே வெற்றிகண்ட பெருமானை தேவர்கள் இத்தலத்திலேதான் பூசித்தனர். சுகப்பிரம்ம ரிஷி, வெள்ளை யானை இவர்கள் பூசித்துப் பேறு பெற்ற தலம்.
இத்திருத்தலத்திற்கு செந்தி மாநகர் என்றும், திருச்சீரலைவாய் என்றும் பெயர்கள் உண்டு. இத்தலம் ஓயாமல், கடல் அலைகளால் மோதப்படுவதால் அலைவாய் என்றழைக்கப்படுகிறது.
அமைவிடம் :
திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர். இக்கோயிலானது தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ் வருகிறது. இத்தலத்திற்கு நேரடியாக மதுரை, திருச்சி, சென்னை, கோவை முதலிய பெருநகரங்களிலிருந்து அரசு விரைவுப் பேருந்துகள் வழியாகச் செல்லலாம். சென்னை-திருநெல்வேலி செல்லும் ரயில் மூலமும் செல்லாம்.
திருச்செந்தூர் சிறப்பு :
திருசெந்தூரின் புராண வரலாற்றை ஆராய்ந்தால், முருகப்பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்துப் போரிட வரும்போது, வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் வந்து திருச்செந்தூரில் தங்கியதாகவும் அங்கு தேவதச்சனான விஸ்வகர்மனால் அமைக்கப்பட்ட ஆலயத்தில் தங்கி, தேவகுருவாகிய வியாழ பகவானால் பூசிக்கப் பெற்று அசுரர்களின் வரலாற்றினை அறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.
வியாழ நக்ஷத்திரம் :
வியாழ பகவானால் பூசிக்கப்பட்ட ஸ்தலமாதலின் திருச்செந்தூர் வியாழ நக்ஷத்திரம் என்று போற்றப்படுகிறது. இங்கிருந்துதான் குமரக்கடவுள் வீரவாகுத் தேவரை அனுப்பி, சூரபத்மனுக்கு அறிவுரை கூறி வரச் சொன்னார். வீரவாகு தேவரும் தூதுச் சென்றார். ஆனால், அவரது அறிவுரைகள் சூரபத்மனால் ஏற்கப்படவில்லை. தூது பயனற்றுப் போனது. மேலும் சூரபத்மன் வீரவாகு தேவரை மரியாதை குறைவாக நடத்தி அனுப்பினான்.
சூர சம்ஹாரம் :
பிறகு முருகப்பெருமான் இங்கு அம்பிகையிடம் வேல் பெற்று, சூரபத்மன் மீது போர் தொடுக்கச் சென்றார். சூரபத்மன் அப்போது முருகப் பெருமானுடைய எதிரில் மாமரமாக நின்றான். சூரபத்மனை முருகப் பெருமான் தன்னுடைய வேலாயுதத்தால் இரு கூறாகப் பிளந்தார். மனக் கருணையால் அவனை ஆட்கொண்டார்.
மாமரம் இரண்டாகப் பிளந்தது. பிளந்தவுடனேயே அதன் ஒரு பாதி மயிலாகவும், மறுபாதி சேவலாகவும் மாறியது. மயிலை வாகனமாக அமைத்துக் கொண்டார். சேவலைக் கொடியாக ஏற்றுக்கொண்டார் முருகப்பெருமான்.
வெற்றி நகரம் :
இவ்வாறு சூரபத்மனுடன் போரிட்டு, வெற்றி வாகை சூடி, தேவர்களை சூரபத்மனிடமிருந்து மீட்டு வந்தமையால், திருச்செந்தூர் ஜெயந்திபுரம் என்று வடமொழியால் அழைக்கப்பட்டு வந்தது. அப்பெயரே மருகி செந்தில் என்றாகி, திருச்செந்தூர் என்று வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு புனிதமும் வளமும் மிகுந்த வெற்றி நகரம் என்றும் பொருளுண்டு. செல்வமும் அருள் வளமும் அளிக்க வல்லது திருச்செந்தூர். இத்திருநகரில் முருகப்பெருமான் ஜெயமூர்த்தியாகவே திகழ்கிறார்.
போரில் அசுரர்களை அழித்த முருகனின் வேலாயுதம் பக்தர்களின் பகையையும் அழித்து வருவதில் ஐயமில்லை.
திருமுருகாற்றுப்படை :
இந்நிகழ்ச்சியை உறுதி செய்யும் வகையில் படித்தோரை பரவசமடையச் செய்யும் திருமுருகாற்றுப்படையில்,
"வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை."
திருச்செந்தூர் குறித்து வழங்கும் பதிகங்களும், புராணங்களும், பிரபந்தங்களும் ஏராளம்.
"சிக்கலில் வேல்வாங்கிச் செந்தூரில் சூரசம்ஹாரம்" என்பது பழமொழி. மாமரமாய்க் காட்சியளித்த சூரபத்மனைக் கொல்வதற்காக, முருகப் பெருமான் வேலாயுதத்தை ஏவியபோது அதன் கொடூரம் தாங்காமல் கடலும் பின் வாங்கியதாக அருணகிரிநாதர் தனது திருப்புகழில் குறிப்பிடுகின்றார்.
கந்த சஷ்டி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று தெரியுமா?
ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.
தோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன் னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும்.
அன்று திரு முருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந் தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும்.
சூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். அல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும்.
ஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நீராடி முருகனை வணங்கிப் பராணம் செய்தல் வேண்டும்.
இரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும். ஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாரணம் செய்தல் வேண்டும்.
ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து, குளித்து முருகனை மனம் உருக வணங்க வேண்டும்.
பூரண கும்பத்தில் தண்ணீர் நிரப்பி மாவிலை வைத்து, தருப்பையை வரிசையாக இட்டு முருகனை அதில் ஆவாகனம் செய்து மலரிட்டு தீபம் காட்டி வழிபடுவது நல்லது.
சஷ்டி விரத நாட்களில் பகலில் தூங்குதல் கூடாது. சஷ்டி தினத்தன்று இரவிலும் விழித்து இருப்பது கூடுதல் பலன்களைத் தரும்.
முருகனை ஆறு காலமும் பூஜை செய்ய வேண்டும்.
6 நாட்களும் கந்தனின் சரித்திரங்களையும், சிறப்புகளையும், திருவிளையாடல்களையும், முருகன் செய்த அற்புதங்களையும் கேட்க வேண்டும்.
திருப்புகழ் பாராயணம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு பாராயணம் செய்கிறோமோ அந்த அளவுக்கு முருகனை நெருங்க முடியும்.
பிரார்த்தனை, பாராயணம் நேரம் தவிர கூடுதல் நேரம் கிடைத்தால் அந்த சமயத்தை வீணாக்காமல் முருகனை மனதில் நிலை நிறுத்தி தியானம் செய்யலாம்.
சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகி விடும்.
விரதத்தை கடைபிடிக்க கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்.
ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால் பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு. இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும். தொடர்ந்து ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நல்லது.
முருக பெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவா? தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர். அந்த ஆறு நாட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது.
சஷ்டி விரதம் அனுசரிக்கும் முறை பற்றி திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.
இவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.
கந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மண்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.
தோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அநுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும். ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும்.
வீட்டில் தூய்மை காக்க வேண்டும். கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி இவற்றை பின்பற்றினோர் குழந்தை பாக்கியம் பெறுவர். வாழ்க்கையில் பற்பல மேன்மைகளை எய்துவர். மேலும் உடல் வளமும் மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி.
ஓம் கம் கணபதயே நமஹ...!!
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
இன்பமே சூழ்க ... !
எல்லோரும் வாழ்க . . . !
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
அன்பே சிவம்
திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'