Monday, June 21, 2021

கோடி கோடியாய் நன்மை கிடைக்கும் குடும்ப முன்னேற்றமும் அதிகரிக்கும் நலம் தரும் நடராஜர் தரிசனம் திருவெண்காடு மண்டைதீவு 15.07.2021


சிவபெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும், இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும்.


ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரமன்று நடைபெறும் நடராஜர் அபிஷேகம் சிறப்பு வாய்ந்ததாகும். அன்றைய தினம் ஆடல் அரசனைப் பாடிப்பணிந்து வழிபட்டால், கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். குடும்ப முன்னேற்றமும் அதிகரிக்கும்.

பொதுவாக நடனம் மற்றும் கலைத் துறை யில் சிறந்து விளங்க நடராஜப் பெருமானை தரிசனம் செய்ய வேண்டும்.

ஆனிக்கு அடுத்து வரக்கூடிய மாதம் ஆடி. அந்த மாதத்தில் நாம் ஓடி ஆடி சம்பாதித்து வாழ்க்கையில் சிறக்க, ஆனி மாத நடராஜர் தரிசனம் வழிகாட்டுகிறது.

எனவே இம்மாதத்தில் நடைபெறும் நடராஜர் தரிசனம் போன்ற விழாக்களில் கலந்து கொண்டால் படிப்பில் முதன்மை பெற வழிவகுக்கும். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.

ஆனி மாதத்தில் உத்திரம் அன்று, நடராஜப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அவர் சன்னிதியில் சிவபுராணம் படிப்பார்கள். நம்மையும் உலகம் போற்றிக் கொண்டாடும்.

எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், உள்ளம் உருகி வழிபடும் இறைவழிபாட்டி ற்கு உண்டு. ஆனால் அதற்கு முழுமையான நம்பிக்கை தேவை.

அந்த நம்பிக்கையை முழுமையாக நடராஜர் மீது வைக்க வேண்டிய மாதம், இந்த ஆனி மாதம் ஆகும். நடராஜரை ‘தில்லைக் கூத்தன்’ என்றும், ‘ஆடலரசன்’ என்றும், ‘கூத்தபிரான்’ என்றும் அழைப்பது வழக்கம்.

கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ் பெற வேண்டுமென்று விரும்பும் மாந்தர்கள், நடராஜப் பெருமானை முழுமையாக வழிபட வேண்டும். அதற்கு உகந்த நாளாக ஆனி மாதம் 31-ந் தேதி (15.7.2021) வியாழக்கிழமை அன்று உத்திர நட்சத்திரம் வருகின்றது. ஆனி உத்திர தரிசனமும், நடராஜர் அபிஷேகமும் நடைபெறுகின்ற நாள் அதுவாகும்.

அன்றைய தினம் இல்லத்து பூஜையறையில் நடராஜர் படம் வைத்து பஞ்சமுக விளக்கேற்றி சிவபுராணம் பாடி சிந்தை மகிழ வழிபட்டால் நலம் யாவும் தருவார் நடராஜப் பெருமான்.

சிவாலயங்களில் சிவகாமியம்மன் உடனாய நடராஜப் பெருமான், சிவன் சன்னிதிக்கு அருகிலேயே இருப்பார். பெரும்பாலான ஆலயங்களில் உற்சவ விக்கிரகமாகவே காட்சி தருவார்.

ஆனால் பேரையூர், ஊட்டத்தூர் போன்ற சில இடங்களில் ‘கல்’ விக்கிரகமாக நடராஜர், சிவகாமி அம்மன் தோற்றம் இருக்கும். எப்படியிருந்தாலும் கலைத்துறையில் பிரகாசிக்க நினைப்பவர்கள் சிதம்பரம் போன்ற நடராஜப் பெருமான் வீற்றிருந்து அருள்வழங்கும் ஆலயத்திற்கு வாய்ப்பு அமையும் பொழுது யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபடலாம். மற்ற நாட்களில் மாதம் தோறும் உத்திரம் நட்சத்திரம் வரும் நாளில் விரதமிருந்து இல்லத்து பூஜையறையில் நடராஜர் படம் அல்லது விக்கிரகம் வைத்து வழிபாடு செய்யலாம்.

நடராஜர் அபிஷேகம் நடைபெறும் பொழுது பால் அபிஷேகம் பார்த்தால் பலன்கள் அதிகம் கிடைக்கும். பன்னீர் அபிஷேகம் பார்த்தால் எண்ணிய காரியம் நடைபெறும். சந்தன அபிஷேகம் பார்த்தால் சந்தோஷங்கள் அதிகரிக்கும். நாம் வாழ்வாங்கு வாழ வெற்றிகளைக் குவிக்க தில்லைக் கூத்தனை ஆனி உத்திரத்தில் வழிபடுவோம். தேனினும் இனிய வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

சுபம்

ஓம் கம் கணபதயே நமஹ...!!

இன்பமே சூழ்க ... !
எல்லோரும் வாழ்க . . . !

மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !

அன்பே சிவம்

திருச்சிற்றம்பலம்'' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'