கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம்பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும்.
கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வருவதால், இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.
கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது.
இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
"இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே!"
‘ஆடிப்பாடி அண்ணாமலை தொழ ஓடிப்போம் நமதுள்ள வினைகளே’ என்கின்றனர் அப்பர் சுவாமிகள். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதற்கான புராண வரலாறு மிகவும் பிரசித்தமானது.
திருவண்ணாமலை புண்ணிய பூமி, ஆன்மிக பூமி. யோகிகள், ஞானிகள், தபோதனர்கள், சித்தர்கள் வாழ்ந்த வாழ்கின்ற பூமி. தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் அருள் வழங்கும் மலை ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் முக்தி தரும் மலை. உலகப் புகழ் பெற்ற தீப தரிசனம், பெளர்ணமி புகழ் கிரிவலம் வரும் மலை திருவண்ணாமலையாகும்.
"அண்ணா மலைஎம் அண்ணா போற்றி!...
கண்ணார் அமுதக் கடலே போற்றி...!"
அடி முடி காணமுடியாத அனற் பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகிற்கு உணர்த்தவே திருமாலும் நான்முகனும் எம் பெருமானின் அடிமுடி தேடினர் என்று சொல்லப்படுகிறது.
படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான், இவர்கள் முன் சோதிப்பிழம்பாகத் தோன்றினார்.
அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. அவ் ஜோதியின் முடியைக் காண அன்னப் பறவை வடிவங்கொண்டு சதுரமுகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக் காண திருமால், வராஹ் அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.
அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார்.
செங்க ணானும் பிரமனுந் தம்முளே
எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலர்
இங்குற் றேனென்று இலிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே!
இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும். யோக நெறியால் அன்றிக் காண முடியாத தெய்வ ஒளியை திருவண்ணாமலையில் ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்தில் உள்ள மலைமேல் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காணலாம்.
கார்த்திகை நாள்
பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.
கார்த்திகை விழா
கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.
திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பானை"க்குஜ1ஸ அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.
விரத முறை
இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில் காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம்
வீடுகளை அலங்கரிக்கும் முறை
பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீடுகளுக்குள்ளும் வெளியிலும் சிட்டி விளக்குகளில் தீபமேற்றி நேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர் கார்த்திகை நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது.
கார்த்திகை நட்சத்திரம்
ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் எனப்படுகிறது
ஓம் கம் கணபதயே நமஹ...!!
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . !
"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''