Monday, May 9, 2016

திருவெண்காட்டில் அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் அற்புதத் திருநாள் அட்சய திரிதியை ! ! ! 09.05.2016


அக்‌ஷய திரிதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத வளர்பிறையின் (சுக்ல பக்‌ஷத்தின்) மூன்றாவது நாள் வரும். ‘அக்‌ஷய’ என்றால் எப்போதும் குறையாதது எனப் பொருள்படும். ’திரிதியை’ என்றால் மூன்றாவது நாள் எனப் பொருள்படும்.


மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


"அன்பினுக்கு இரங்கும் அருட்கடல்!.. 
திருவெண்காடுறை சித்திவிநாயகன் திருக்கழல் சிந்தை செய்வோம்!."

|| அக்‌ஷய திரிதியையின் முக்கியத்துவம் || 


அக்‌ஷய திரிதியை நாளன்று தானம் செய்வது மிகவும் நன்மை தரக் கூடிய ஓர் உன்னதமான செயலாகும். இந்துக்கள் கடைப்பிடிக்க வேண்டிய மூன்று நற்செயல்களில் தானமும் ஒன்றாகும். மேலும், அக்‌ஷய திரிதியை நாளன்று அறிவை வளர்க்கும் நல்ல நூல்களைக் கற்க துவங்குவது மிகவும் சிறப்பாகும். உதாரணமாக, வேத உபநிடதங்கள், பகவத் கீதை, திருக்குறள் போன்றவை.

மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
யாழ்ப்பாணம் - இலங்கை


"திருவெண்காடு திவ்வியநாம சேஷ்திரத்தில் பரிவார மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மஹாலட்சுமி"

"தானம், தயவு மற்றும் தன்னடக்கம் – இவை மூன்றும் எல்லோரிடமும் இருக்கவேண்டிய மிக முக்கியமான நற்பண்புகள். உன் தேவைக்கு அதிகமானதை தானமாக தந்திடு; ஏழை எளியவர்களிடம் தயவு காட்டு; மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்தி தன்னடக்கம் கொள்வாயாக.” (யஜுர்வேதம், பிருகதாரண்யக உபநிடதம் 5:3)

|| சாஸ்திரங்களில் தானம் || 

மகாபாரதத்தில் அக்‌ஷ்ய திரிதியை நாளின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகின்றது. உணவு, உடை, பொருள், அறிவு போன்றவற்றை தேவைபடுவோருக்கு தானமாக தரவேண்டும் என்பதை பல கதைகளின் மூலமாக மகாபாரதம் உணர்த்துகின்றது.


பகவான் கிருஷ்ணருக்கு ஆடை தேவைபட்ட போது தக்க சமயத்தில் திரௌபதி தன் ஆடையை தானமாக கொடுத்தாள். அவள் செய்த தானத்தின் பலனாக, துரியோதணனின் சபையில் பகவான் கிருஷ்ணர் திரௌபதிக்கு ஆடை தந்து காத்தருளினார்.

அதேபோல தான், பகவான் கிருஷ்ணரின் நெருங்கிய நண்பரான குசேலரின் கதையும் ஏழ்மையிலும் தானம் புரிவதன் மகத்துவத்தை உணர்த்துகின்றது. தன்னிடமிருந்த ஒருபிடி சோற்றையும் கிருஷ்ணருக்கு தானமாக தந்திட்ட குசேலரின் பரந்த குணமும் நட்புடை நெஞ்சமும் எக்காலமும் போற்றத்தக்கது.


தன் வாழ்க்கையை தானத்திற்காகவே அர்ப்பணித்த கர்ணரின் கதைகளும் ஏராளம் உள்ளன. விறகு கேட்க வந்தவரிடம் தன் வீட்டு தூண்களையே தானமாக தந்தவர்.

அதேபோல புராணத்திலும் ததீசி எனும் முனிவர் தன் முதுகெலும்பை தானமாக தரும் கதையும் அமைந்துள்ளது. இக்கதையின் மூலமாக இந்துக்கள் உடலுறுப்பு தானம் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர்.



|| அக்‌ஷய திரிதியைக்கு என்ன செய்யலாம் ? || 

அக்‌ஷய திரிதியை நன்னாளன்று நிறைய புண்ய கர்மங்கள் மேற்கொள்ளலாம். ஜபம், தவம், தானம், ஸ்நானம் போன்றவை முக்கியமான புண்ய கர்மங்கள் ஆகும்.


ஜபம் - இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்தல்

தவம் – இறைவனை மனத்தில் நிலைநிறுத்தி, ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து விரதமிருத்தல்

தானம் – தேவைபடுவோருக்கு உணவு, உடை, பொருள், புத்தகம் போன்றவற்றை தருதல்

ஸ்நானம் – தீர்த்த தலங்களுக்கு யாத்திரை சென்று புனித குளியல் மேற்கொள்தல்



|| நினைவில் கொள்ளவேண்டியது || 

எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், தங்கமோ வைரமோ நாளை நம்மோடு வரப் போவதில்லை. உயிர் குடியிருக்கும் இந்த உடல் கூட நமக்கு சொந்தமில்லை என்பதே சத்தியம். எப்போதும் நம்முடன் வருவதெல்லாம் நாம் செய்யும் கர்மங்களே (செயல்களே). ஆகவே, முடிந்தவரை நல்ல செயல்களை மேற்கொள்வோம்.

ஓம் தத் ஸத்


ஓம் கம் கணபதயே நமஹ...!!


தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…! போற்றி…!!
மேன்மைகொள் சைவநீதி . . . !
விளங்குக உலகமெல்லாம் . . . !
இன்பமே சூழ்க . . . !
எல்லோரும் வாழ்க . . . ! 


"திருச்சிற்றம்பலம்" '' திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'